திருவள்ளூர்
3 சக்கர மோட்டார் சைக்கிளில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்திய மாற்றுத்திறனாளி
|3 சக்கர மோட்டார் சைக்கிளில் ரகசிய அறையில் வைத்து கஞ்சா கடத்திய மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கும்மிடிப்பூண்டி வழியாக கஞ்சா அடிக்கடி கடத்தப்படுவதாக கவரைப்பேட்டை போலீசாருக்கு புகார்கள் சென்றது. இந்நிலையில் நேற்று கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த 3 சக்கர வாகனத்தை போலீசார் சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அந்த மோட்டார் சைக்கிளில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
இதுகுறித்த விசாரணையில் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்தவர் மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் ரிவானே (வயது42) என்பதும், அவர் 18 பாக்கெட்டுகளில் மொத்தம் 35 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சக்கர மோட்டார் சைக்கிளில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தி வந்த மனோஜ் ரிவானே கைது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.