< Back
மாநில செய்திகள்
கருணை கொலை செய்ய வேண்டி கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி மனு
அரியலூர்
மாநில செய்திகள்

கருணை கொலை செய்ய வேண்டி கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி மனு

தினத்தந்தி
|
21 March 2023 12:18 AM IST

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மாற்றுத்திறனாளி ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் அரியலூர் கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மாயகிருஷ்ணன் அளித்த மனுவில், எனது சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் ஊராட்சி மன்ற தலைவரிடமிருந்து எனது சொத்தை மீட்டு தர வேண்டும். இல்லையென்றால் என்னை கருணை கொலை செய்யுங்கள் என கூறியுள்ளார்.

இதேபோல் அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் செயல் அலுவலராக உள்ள முத்துப்பாண்டி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாகவும், வரவு- செலவு கணக்குகளை முறையாக தெரிவிப்பதில்லை எனவும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரதராஜன்பேட்டை பேரூராட்சியின் தி.மு.க.வை சேர்ந்த தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ் கண்ணீர் மல்க தி.மு.க. உறுப்பினர்கள் 11 பேருடன் வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார்.

தள்ளாத வயதிலும் தளராமல்...

அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் உயிரிழந்தார். இவரது மனைவி ஞானம்மாள் இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தும் இவரை கவனிக்க ஆள் இல்லாமல் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவின் அடிப்படையில் சாக்கடைநீர் செல்லும் ஓடையில் இடத்தை காட்டினார்கள். அப்போது நான் எப்படி ஓடையில் வீடு கட்ட முடியும் என கேட்டதற்கு வருவாய்த் துறையினர் உரிய பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் தனக்கு வழங்கிய இடத்திற்கு பதிலாக வீடு கட்டும் வகையில் மாற்று இடம் வழங்க வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட முறை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்த நிலையில் இன்று அதே கோரிக்கையை வலியுறுத்தி மூதாட்டி ஞானம்மாள் தள்ளாத வயதிலும் தளராமல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். இதுபோல் ஏராளமான மக்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்