புதுக்கோட்டை
கறம்பக்குடியில் வெறிச்சோடி கிடக்கும் உழவர் சந்தை
|விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளாததால் கறம்பக்குடியில் உள்ள உழவர் சந்தை வெறிச்சோடி கிடக்கும் நிலையில் சாலையோர தரைக்கடைகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
வெறிச்சோடி கிடக்கும்உழவர் சந்தை
கறம்பக்குடி டி.இ.எல்.சி சாலையில் உழவர் சந்தை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 27 கடைகளுடன் தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தையில் ஒரு வேளாண்மை துறை அலுவலர் மற்றும் 2 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கறம்பக்குடி விவசாயம் நிறைந்த பகுதி என்பதாலும், காய்கறிகள் கீரை மற்றும் கிழங்கு வகைகள் இப்பகுதியில் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன என்பதாலும் உழவர் சந்தைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொடக்கத்தில் அனைத்து கடைகளும் செயல்பட்ட நிலையில் பின்னர் படிப்படியாக குறைந்து. தற்போது ஒரு கடை மட்டுமே செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த படாததால் உழவர் சந்தையில் உள்ள கடைகள் பராமரிப்பு இன்றி உள்ளன. கடைகள் முன்பு முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. அனைத்து வசதிகளும் இருந்தும் இந்த உழவர் சந்தையை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளாததால் எப்போதும் வெறிச்சோடி கிடக்கிறது.
கோரிக்கை
அதேவேளையில் கறம்பக்குடி திருவோணம் சாலை, கடைவீதி, அம்புக்கோவில் சாலை போன்ற பகுதிகளில் கீரைகள், மூலிகைகள், காய்கறி மற்றும் கிழங்குகளை சாலையோரத்தில் தரைக்கடை போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் சீனி கடைமுக்கம், அம்புக்கோவில் முக்கம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்குவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள சாலையோர கடைகளை உழவர் சந்தைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தரைக்கடைகளைமாற்ற வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊரின் மைய பகுதியில் இருக்கும் உழவர் சந்தையை பயன்படுத்தாமல் இருப்பது புரியாத புதிராக உள்ளது. மற்ற பகுதியுடன் ஒப்பிடுகையில் கறம்பக்குடியில் காய்கறிகளின் விலை அதிகம். உழவர் சந்தை முழு செயல்பாட்டில் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. வேளாண்மைதுறை அதிகாரிகள் தரைக்கடைகளை உழவர் சந்தைக்கு செல்ல அறிவுறுத்தினாலும் யாரும் செல்வது இல்லை. சுகாதாரமற்ற பகுதியில் வாகன தூசிகளுக்கு மத்தியில் விற்கப்படும் பொருட்களால் சுகாதாரகேடு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் தரைக்கடைகளை உழவர் சந்தைக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.