நாமக்கல்
கறிக்கோழி கிலோவுக்கு ரூ.18 சரிவு
|நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.18 சரிவடைந்து உள்ளதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
கறிக்கோழி விலை சரிவு
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.) தினசரி நிர்ணயம் செய்து வருகிறது. உற்பத்தி குறையும் போது, கறிக்கோழி விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது விலை குறைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக கறிக்கோழி விலை கிடுகிடு என உயர்ந்து வந்தது. கடந்த 17-ந் தேதி அதிகபட்சமாக கிலோ ரூ.143-க்கு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்கு பிறகு படிப்படியாக குறைந்து வந்த கறிக்கோழி விலை நேற்று முன்தினம் கிலோ ரூ.128 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதிரடியாக கிலோவுக்கு ரூ.18 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது.
பண்ணையாளர்கள் கவலை
இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
தமிழகத்தில் தொடர்மழை காரணமாக சீதோஷணநிலை மாறி உள்ளது. அதனால் கோழியின் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை குறைத்து வியாபாரிகள் கோழிகளை பிடிக்கின்றனர். எனவே தான் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால், கறிக்கோழி நுகர்வும் பொதுமக்கள் இடையே குறைந்து உள்ளது. இதுவும் விலை குறைப்புக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. கறிக்கோழி விலை சரிவடைந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.