< Back
மாநில செய்திகள்
உயிருடன் இருக்கும் சிறுவனுக்கு இறப்பு சான்றிதழ் பெற்று ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

உயிருடன் இருக்கும் சிறுவனுக்கு இறப்பு சான்றிதழ் பெற்று ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்

தினத்தந்தி
|
3 July 2023 11:52 PM IST

ஆரணி அருகே உயிருடன் உள்ள சிறுவனை இறந்ததாக கூறி போலி ஆவணம் தயாரித்து இறப்பு சான்றிதழ் வாங்கி ரேஷன்கார்டில் பெயர்நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சொத்தை அபகரிக்க முயன்று இ்வ்வாறு செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பம்

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி பூங்காவனம். இவர்களுக்கு ஹரிஹரன், கோபி (வயது 17) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கார்த்திகேயனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு சென்று விட்டார். அவர் பிரிந்த நிலையில் பூங்காவனம் கடந்த 2-ந் தேதி இறந்து விட்டார்.

பூங்காவனம் இறந்தபின் அவரது மூத்த மகன் ஹரிகரன் சின்ன பொண்ணு வளர்ந்து வருகிறார். இளைய மகன் கோபி, உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். பூங்காவனம் இறந்த அதே நாளில் கோபியும் இற்து விட்டதாக போலியான ஆவணங்களை தாக்கல் செய்து இறப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

எப்படி உயிருடன் இருக்க முடியும்

அதனை ஆதாரமாக கொண்டு போளூர் வட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் ரேஷன்கார்டில் கோபியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் பொருள் வாங்குவதற்காக ரேஷன் அட்டையுடன் கோபி சென்றுள்ளார். அப்போது ரேஷன்கடைக்காரர், அவரிடம் நீ இறந்து விட்டதாக உனது பெயர் நீக்கப்பட்டுள்ளது. நீ எப்படி உயிருடன் இருக்க முடியும் என கேட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கோபி, நான் உயிருடன் இருக்கும்போது என்னை எப்படி நீக்குவார்கள் என கேட்டபோது பதிவேட்டில் அப்படித்தான் உள்ளது. இது சம்பந்தமாக போளூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில்தான் முறையிட வேண்டும் என ரேஷன்கடைக்காரர் கூறியுள்ளார். அதன்பேரில் போளூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பூங்காவனத்தின் பூர்வீக சொத்தை அவரது பெயரில் தாத்தா, பாட்டி எழுதிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. எனவே சொத்தை அபகரிக்கும் நோக்கில் பூங்காவனம் இறந்த அன்று அவரது மகன் கோபியும் இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்து இறப்பு சான்றிதழ் பெற்றிருக்கலாம் என்றும் அதனை வைத்து ரேஷன்கார்டில் கோபி பெயர் நீக்கம் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

கோபி இறந்து விட்டதாக தயாரிக்கப்பட்ட ஆவணம் போலியானது என்பதை பரிசீலிக்காமல் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதா? அல்லது போலியாக வழங்கிய இறப்பு சான்றிதழை வைத்து அதன் உண்மை தன்மையை பரிசோதிக்காமல் ரேஷன்கார்டில் பெயர்நீக்கம் செய்யப்பட்டதா? அதற்கு காரணமானவர்கள் யார்? கோபி இறந்ததாக சித்தரித்தவர் யார்? என்பது மர்மமாக உள்ளது.இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடைபெற உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்