< Back
மாநில செய்திகள்
உயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரம்
கரூர்
மாநில செய்திகள்

உயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரம்

தினத்தந்தி
|
19 Nov 2022 6:51 PM GMT

குளித்தலையில் இருந்து மணத்தட்டை செல்லும் வழியில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் பட்டுப்போன மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுப்போன மரம்

கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட்டில் இருந்து மணத்தட்டை செல்லும் வழியில் திருச்சி - கரூர் சாலையில் தென்கரை வாய்க்கால் ஓரத்தில் பட்டுப்போன நிலையில் மரம் ஒன்று உள்ளது.இந்த மரத்தின் கிளை ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைந்து வாய்க்காலுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பட்டுப்போன மரத்தின் கிளைகள் எப்பொழுது வேண்டுமானாலும் ஒடிந்து விடும் நிலையில் உள்ளது.

கோரிக்கை

அந்த மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தால் அது சாலையின் நடுவிலேயே விழக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கிளைகள் விழுந்தால் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மீதோ வாகனங்கள் மீதோ விழுந்து விடக்கூடிய அபாய நிலை உள்ளது. இதனால் விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே இந்தப் பட்டுப்போன மரத்தை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சத்தோடே செல்கிறோம்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

குளித்தலையை சேர்ந்த செல்லபாண்டியன்:-மணத்தட்டை செல்லும் சாலையில் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரம் எப்பொழுது வேண்டுமானாலும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அச்சாலை வழியாக செல்லும் பொழுது அச்சத்தோடே சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த மரத்தை உடனடியாக வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு

குளித்தலையை சேர்ந்த சுரேஷ்:- குளித்தலை பகுதியில் பிரதான சாலையாக உள்ள மணத்தட்டை சாலை வழியாக தினந்தோறும் மோட்டார் சைக்கிள்கள், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன்கள் போன்றவை சென்று வருகின்றன. ஆபத்தான நிலையில் இப்பகுதியில் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரம் ஒடிந்து வாகனங்கள் மீதோ, பொதுமக்கள் மீதோ விழுந்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே எந்த விதமான அசம்பாவிதங்களும் நிகழும் முன்பு இந்த பட்டுப்போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்