தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்-அமைச்சராக்க முடியாது: திருமாவளவன் பேச்சு
|சாதி ஒழிப்பே விசிகவின் நோக்கம் என்று திருமாவளவன் கூறினார்.
சென்னை,
உள் ஒதுக்கீடு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து, சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும். பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும். பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும்; வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு செய்வதற்கு இந்திய மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் சொன்ன கருத்துக்களை அந்த தீர்ப்பிலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாததற்கு வன்னியர்கள் எண்ணிக்கையில் எந்த அளவு இருக்கிறார்கள் என்பதற்கு தரவுகள் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கூறுவது எஸ்.எடி மக்களுக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் வரும் போகும் ஆனால், எந்த காலத்திலும் ஒரு தலித்தை முதல்-அமைச்சராக்க முடியாது.
ஜனநாயகத்தை பற்றி விசிகவிற்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். சாதி ஒழிப்பே விசிகவின் நோக்கம்; அதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள். சாதிய உள்நோக்கத்துடன் யாரும் என் பின்னால் வர வேண்டாம். இதை நான் 1996-லேயே சொல்லிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.