அரியலூர்
மகளிர் உரிமைத்தொகை உதவி மையத்தில் அலைமோதும் பெண்கள் கூட்டம்
|மகளிர் உரிமைத்தொகை உதவி மையத்தில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் தகுதியுடைய குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பான விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், தகுதியுடைய குடும்பத்தலைவிகள் மறுவிண்ணப்பம் செய்யும் வகையிலும், அரியலூர் கலெக்டர் அலுவலகம் உள்பட மாவட்டத்தில் 7 இடங்களில் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரியலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையமும் ஒன்று. இங்கு தினமும் நிறைய மக்கள் நேரில் வந்து தங்களுக்கு தேவையான தகவல்களையும், தகுதி உடையவர்கள் மறு விண்ணப்பம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த மையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இங்கு வரும் நிலையில், போதிய ஆட்களை இதற்கான பணிக்காக நியமிக்காததால் இந்த மையம் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இதுகுறித்து மக்களிடம் கேட்கும்போது, இன்னும் சில அதிகாரிகளை இந்த பணிக்காக நியமித்தால் நேர விரயம் ஏற்படாமலும், பொதுமக்களுக்கு வசதியாகவும் இருக்கும் என கூறுகின்றனர்.