< Back
மாநில செய்திகள்
காய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

காய்கறி மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்

தினத்தந்தி
|
17 Sept 2023 1:48 AM IST

விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணம் கடைவீதி- காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் கும்பகோணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணம் கடைவீதி- காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் கும்பகோணம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி

முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. வளர்பிறை சதுர்த்தி நாளன்று இந்த விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் பிரதிஷ்டை செய்து கொழுக்கட்டை, பொரி, சுண்டல், தேங்காய், பழம், கரும்பு வைத்து மக்கள் வழிபாடு செய்வார்கள்.

பின்னர் 3 அல்லது 5 நாட்கள் கழித்து வாணவேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமான ஒன்றாகும். இந்த நிகழ்வானது ஆண்டு தோறும் இந்துக்களால் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவல்-பொறி விற்பனை

நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கும்பகோணம் பகுதியில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கும்பகோணத்தில் சீனிவாச நல்லூர், கும்பகோணம்- திருவாரூர், காரைக்கால் சாலை உள்ளிட்ட பகுதிகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.

தற்போது சிலைகள் தயாரிக்கும் பணிகள் முடிந்துவிட்டது. இதனால் தற்போது விநாயகர் சிலைகளுக்கு வர்ணங்கள் பூசும் பணிகள் நடக்கிறது.

வர்ணங்கள் பூசும் பணியை பொருத்தவரையில் முதலில் தெளிப்பு (ஸ்ப்ரேயர்) மூலம் முழுவதும் ஒரு நிறத்தினை கொடுத்து விட்டு அடுத்தக்கட்ட வர்ணம் கொடுக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க வேண்டிய நிலையில் உள்ளதால் தண்ணீர் மாசுபடாத அளவிற்கு நிறம் கொடுக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணத்தில் தாராசுரம் மார்க்கெட், பாலக்கரை போன்ற இடங்களில் வாழைத்தார் விற்பனை, அவல்-பொறி விற்பனை செய்யப்படும்.

63 சிலைகள் பிரதிஷ்டை

நாளை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனை நடந்தது. தாராசுரம் மார்க்கெட்டில் வாழைத்தார், வாழைப்பழம், பூசணிக்காய் போன்றவை குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவல், பொட்டுக்கடலை, பொரி விற்பனை கடைகளிலும், கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கும்பகோணத்தில் பாலக்கரை, பெருமாள் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, நீலத்தநல்லூர், கும்பகோணம் தலைமை தபால் நிலையம், கும்பகோணத்தில் உள்ள கர்ண கொல்லை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக விநாயகர் சிலைகளுக்கு தினமும் பல்வேறு வகையான பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஒலி பெருக்கி மூலம் விநாயகர் பாடல்கள் ஒலி பரப்பபட்டு வருகின்றன. கும்பகோணம் கோட்டத்தில் 63 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் தினமும் பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து வருகின்றனர். தாங்கள் பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலைகளுக்கு தினமும் காலை, மாலை பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கி வருகின்றனர். மேலும் பிரச்சினைகள் ஏற்படாதவாறு கண்காணிக்க போலீசார் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விநாயகர் சதுர்த்தி நெருங்குவதையொட்டி கும்பகோணம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் செய்திகள்