திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
|ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆங்கில புத்தாண்டு
2023-ம் ஆங்கில புத்தாண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பெரும்பாலான பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடி வரவேற்றனர்.
இரவில் புத்தாண்டு கொண்டாட்டம் என்று தேவையின்றி மோட்டார் சைக்கிளில் வலம் வருபவர்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவில்
இந்த நிலையில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீராடி கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் பக்தர்கள் எந்தவித சிரமமின்றி வரிசையாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது
. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் சம்பந்த விநாயகருக்கும் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கிரிவலம்
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதல் இன்று இரவு வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
பக்தர்கள் வசதிக்காக கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.