கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை இழுத்து சென்ற முதலை - அதிர்ச்சி தரும் காட்சி
|கொள்ளிடம் ஆற்றில் குளித்த வாலிபரை முதலை இழுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடக்கு வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி. இவரது மகன் திருமலை (18). இவர் இன்று மாலை தனது நண்பர்களுடன் வீட்டிற்கு பின்புறம் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளார்.
அப்போது முதலைகள் நிறைந்த இந்த ஆற்றில் இருந்த ராட்சத முதலை ஒன்று திடீரென திருமலையை கடித்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இதனால் திருமலை தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்த அவருடன் குளித்தவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் முதலையை விரட்டி உள்ளனர். ஆனால் முதலை ஓடி விட்டது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து முதலை கடித்து இழுத்துச் சென்ற திருமலையை ஆற்றில் தேட துவங்கினர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சிதம்பரம் வனத்துறையினர் பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து இழுத்துச் சென்ற திருமலையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது சம்பவம் நடந்துள்ள இந்த வேளக்குடி கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிக அளவில் இருக்கிறது. இது அடிக்கடி ஆற்றுக்குள் இறங்கும் ஆடு மாடுகளை கடித்து கொன்று விடுவதோடு மனிதர்களையும் கடித்து விடுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர்.