< Back
மாநில செய்திகள்
50 ஆயிரம் இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆய்வு செய்யப்படும்; டாக்டரின் மனுவுக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பதில்
திருச்சி
மாநில செய்திகள்

50 ஆயிரம் இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆய்வு செய்யப்படும்; டாக்டரின் மனுவுக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பதில்

தினத்தந்தி
|
10 July 2023 1:49 AM IST

50 ஆயிரம் இருக்கைகளுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆய்வு செய்யப்படும் என்று டாக்டரின் மனுவுக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை பதில் அளித்துள்ளது.

முதல்-அமைச்சருக்கு மனு

திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு உறுப்பினரான டாக்டர் அலீம், திருச்சி மாவட்டத்தில் 50 ஆயிரம் இருக்கைகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். அந்த மனுவுக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம், ஒரு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஒரு நீச்சல் குளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் மேற்படி விளையாட்டு வசதிகள் முழுமையாக நிறுவப்பட்ட பிறகு, படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது திருச்சி மாவட்ட விளையாட்டு மைதானம் அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது. இது தவிர, தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கிரிக்கெட் மைதானம்

ஒரு சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க 5 ஏக்கர் முதல் 7 ஏக்கர் வரை நிலம் தேவை. தற்போது 29 சட்டமன்ற தொகுதிகளில் சிறுவிளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இதர சட்டமன்ற தொகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படும். 2021-22-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி ஆகிய இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் 50 ஆயிரம் இருக்கைகள் கொண்ட கிரிக்கெட் மைதானம் அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த பின் உரிய அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதிஸ்டாலின், கே.என்.நேரு ஆகியோருக்கு டாக்டர் அலீம் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்