அரியலூர்
கழிவுநீர் தொட்டியில் விழுந்த சினைமாடு உயிருடன் மீட்பு
|கழிவுநீர் தொட்டியில் விழுந்த சினைமாடு உயிருடன் மீட்பு
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் காரைக்குறிச்சி சாலையில் வசித்து வருபவர் குருநாதன். இவருக்கு சொந்தமான சினை மாடு மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வீட்டுக்கு அருகில் இருந்த கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்தது. இதையறியாத குருநாதன் குடும்பத்தினர் அந்த பசுமாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாடு கத்தும் சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்தபோது, மாடு கழிவுநீர் தொட்டியில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பசுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் மாட்டை மீட்க முடியவில்லை. இதற்கிடையே ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மாட்டை உயிருடன் மீட்டனர்.