திண்டுக்கல்
கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு
|வடமதுரை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை, தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). விவசாயி. இவர், 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பசுக்களை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு பசுமாடு தோட்டத்தில் இருந்த 90 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அந்த கிணற்றில் சுமார் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது. பசுவின் அலறல் சத்தம்கேட்டு பிரபாகரன் அங்கு ஓடி வந்தார்.
பின்னர் கிணற்றில் பார்த்தபோது, பசு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. உடனே அங்கிருந்த இளைஞர்கள் கிணற்றுக்குள் குதித்து பசுவை கிணற்றின் திட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் வேடசந்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.