< Back
மாநில செய்திகள்
மாட்டை காணவில்லை என புகார் அளித்த தாய்-மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தம்பதி
சென்னை
மாநில செய்திகள்

மாட்டை காணவில்லை என புகார் அளித்த தாய்-மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தம்பதி

தினத்தந்தி
|
28 July 2022 9:22 AM IST

மாட்டை காணவில்லை என புகார் அளித்த தாய்-மகளை இரும்பு கம்பியால் தம்பதி தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் இந்திராணி (வயது 80). தனது மகள் ரேணுகாவுடன் வசித்து வரும் இவர், சொந்தமாக மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு மாடு சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து இந்திராணி மற்றும் அவரது மகள் ரேணுகா இருவரும் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தங்கள் வீட்டின் அருகே வசிக்கும் ரமேஷ் என்பவர் மீது சந்தேகமாக இருப்பதாகவும் கூறி இருந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சேர்ந்து தன் மீது போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெறக்கூறி வீட்டுக்குள் இருந்த இந்திராணி, அவருடைய மகள் ரேணுகா இருவரையும் வெளியே இழுத்து போட்டு இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். தாய்-மகள் இருவரும் கீழே விழுந்த போதிலும் விடாமல் கணவன்-மனைவி இருவரும் வளைத்து வளைத்து தாக்கினர்.

பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்த போதிலும் அங்கிருந்த சிலர் ரமேசை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். சிறிது நேரத்துக்கு பிறகே அங்கிருந்தவர்களில் சிலர் ரமேசை தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதில் காயம் அடைந்த மூதாட்டி மற்றும் அவருடைய மகள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்