< Back
மாநில செய்திகள்
பெரம்பலூரில் பட்டாசுகள் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் பட்டாசுகள் ஏற்றிச்சென்ற கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

தினத்தந்தி
|
20 Oct 2023 12:02 AM IST

சிவகாசியில் இருந்து சென்னைக்கு பட்டாசுகள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி பெரம்பலூரில் சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இருந்து சென்னைக்கு பட்டாசு ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இதனை விருதுநகரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 43) என்பவா் ஓட்டி வந்துள்ளார். அப்போது அவருடன் மாற்று டிரைவர் பால்ராஜ் (37) பயணம் செய்தார்.

நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் ஏறி சென்று கொண்டிருந்தது. அப்போது முத்துக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி மேம்பால சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கன்டெய்னர் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தன. டிரைவர்கள் முத்துக்குமார், பால்ராஜ் ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வெளியே வந்தனர்.

மாற்று வாகனம் மூலம் அனுப்பிவைப்பு

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கன்டெய்னர் லாரியில் பட்டாசுகள் இருந்ததால் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் பட்டாசுகள் வெடிக்காமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் கன்டெய்னர் லாரியில் இருந்த பட்டாசுகள் தீயணைப்பு வீரர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியதால் லாரி விபத்துக்குள்ளானதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்