< Back
மாநில செய்திகள்
ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
5 Sept 2023 2:22 PM IST

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட ‘புல்லட்’ மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது.

கன்டெய்னர் லாரியில் தீ விபத்து

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் மோட்டார் சைக்கிள் (புல்லட்) தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட புல்லட் மோட்டார் சைக்கிள்கள் கன்டெய்னர் லாரி மூலம் அரியானா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கன்டெய்னர் லாரியை மகேந்தர் (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றார். கண்டெய்னர் லாரி வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரகடம் காரணிதாங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கன்டெய்னர் லாரியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

மோட்டார் சைக்கிள்கள் சேதம்

உடனே டிரைவர் மகேந்தர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். தீ கன்டெய்னரில் இருந்த புல்லட் மோட்டார் சைக்கிள்களில் பரவி மளமளவென எரிந்தது.

தீ விபத்து குறித்து ஒரகடம் போலீசருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் கன்டெய்னரில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கம்பிகளில் கன்டெய்னர் லாரி மீது உரசி தீ விபத்து ஏற்பட்டதா அல்லது லாரியில் உள்ள பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்