திருவள்ளூர்
நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல்; 6 பேர் கைது
|திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தில் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ராஜா நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவரது மனைவி கன்னியாகுமாரி (48). இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் மற்றும் சிலர் சேர்ந்து குழாய்ப்புதைப்பதற்காக பள்ளம் தோண்டினார்கள். இதை பார்த்த கன்னியாகுமாரி எங்கள் நிலத்தில் எதற்காக பள்ளம் வெட்டுகிறீர்கள் என்று கேட்டபோது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் கன்னியாகுமாரி மற்றும் அவரது உறவினர் சாய் லட்சுமி (17) காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து இருதரப்பினரும் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் (22), தருவன் பிரகாஷ் (23), பிரபாகரன் (22) மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த ஜெகநாதன் (45), நித்தேஷ் (21), சூர்யா (21) ஆகிய 6 பேரை கைது செய்து திருத்தணி சிறையில் அடைத்தனர்.