திண்டுக்கல்
கோவிலில் பூஜை செய்வதில் இருதரப்பினர் இடையே மோதல்
|தங்கம்மாபட்டி வண்டி கருப்பணசாமி கோவிலில் பூஜை செய்வதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில், திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பிரசித்திபெற்ற வண்டிகருப்பணசாமி கோவில் உள்ளது. அந்த வழியாக செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள், அங்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புதிதாக வாகனம் வாங்குவோர், தங்களது வாகனங்களை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்துவிட்டு எடுத்து செல்வார்கள். இக்கோவிலில் பூஜை செய்வது தொடர்பாக, குப்பாம்பட்டியை சேர்ந்த இருதரப்பு பூசாரிகளுக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று ஒருதரப்பினர் பூஜை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மற்றொரு தரப்பினர் நாங்களும் பூஜை செய்வோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஏற்கனவே பூஜை செய்து வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டுகள் (திண்டுக்கல் புறநகர்) மணிமாறன், (வேடசந்தூர்) துர்காதேவி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது இருதரப்பினரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கோர்ட்டு தீர்ப்பு வரும் வரையில் ஆடி மாதத்திற்கு மட்டும் இருதரப்பினரும் தலா 15 நாட்கள் பூஜை செய்து கொள்ளுமாறு கூறினர். இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.