< Back
மாநில செய்திகள்
மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம்

தினத்தந்தி
|
13 Jan 2023 12:34 AM IST

மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்துவது தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் படி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள், ஆய்வகங்கள், மருத்துவ பரிசோதனை கூடங்களில் உருவாகும் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்தவும், அவற்றை கண்காணிக்கவும், எனது தலைமையிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்கள் உயிர் மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றுதல் வேண்டும். அனைத்து மருத்துவமனைகள், சிகிச்சை நிலையங்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உரிய இசைவாணை மற்றும் அங்கீகாரம் பெறுதல் வேண்டும். மேலும் மாவட்டத்தில் உருவாகும் அனைத்து மருத்துவக்கழிவுகளும் முறையாக சேகரித்து கடலூர் மாவட்டத்தில் இயங்கும் பொது உயிர் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனத்தின் மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவக்கழிவுகளை கையாளும் மருத்துவ பணியாளர்களுக்கு, மருத்துவக்கழிவுகளை கையாளும் முறை குறித்து சுழற்சி முறையில் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். பொதுக்கழிவுகளுடன் மருத்துவக்கழிவுகள் கலக்கப்படாமல் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும்.

புகார் தெரிவிக்கலாம்

மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்து செல்வதையும், பிற வாகனங்களில் எடுத்து செல்லாமல் இருப்பதையும் காவல்துறை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்கள் https://tnpcb.gov.in/bmwms/#/login என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, அதன் பிறகு தங்கள் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்.

மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது இடங்களில் கொட்டுவதோ மற்றும் பொதுக்கழிவுகளுடன் கலந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது தெரிந்தால் பொதுமக்கள் அரியலூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை 8220051372 என்ற செல்போன் எண்ணிலும், deeary@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்