பெரம்பலூர்
வாலிபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்; வங்கி நிர்வாகத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
|வாலிபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
கடன் பெற்றார்
பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரை சேர்ந்தவர் துரை. இவரது மகன் ராஜதுரை(வயது 23). இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஒரு வங்கி கிளையில், சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு இயக்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். மேலும் பெரம்பலூர் மாவட்ட தாட்கோ அலுவலகத்திலும் ராஜதுரை கார் வாங்கி தொழில்செய்வதற்காக கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் தாட்கோ மூலம் ராஜதுரைக்கு 30 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ராஜதுரை சேமிப்பு கணக்கு வைத்துள்ள தனியார் வங்கியில் 2016-ம் ஆண்டில் தாட்கோ உதவியுடன் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 366 முன்னேற்பு மானியத்துடன், தனது பங்களிப்பு தொகை ரூ.33 ஆயிரத்து 522 செலுத்தி ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 889 கடன் பெற்றிருந்தார்.
காரை ஜப்தி செய்வதாக...
மானியம், பங்களிப்பு தொகை போக மீதம் ரூ.4 லட்சத்து 27 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த கடன்தொகையை ராஜதுரை மாதாமாதம் ரூ.15 ஆயிரம், சிலமாதங்களில் ரூ.30 ஆயிரம் வீதம் 27 தவணைகளில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் செலுத்தியுள்ளார். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் பாக்கி ரூ.7 ஆயிரம் மட்டும் நிலுவையில் இருந்தது.
இந்தநிலையில் வங்கி நிர்வாகத்தினர் ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கடன் நிலுவை உள்ளதாக ராஜதுரைக்கு நோட்டீசு அனுப்பினர். உடனே கட்டாவிட்டால் காரை ஜப்தி செய்வதாக கூறினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜதுரை வங்கியின் கிளை மேலாளர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆகியோர் மீது வக்கீல் திருநாவுக்கரசு மூலம், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தார்.
நிவாரணத்தொகை
இந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரித்தனர். இதில் வங்கி நிர்வாகத்தின் சேவை குறைபாடு காரணமாக, மனஉளைச்சலுக்கு ஆளானமனுதாரருக்கு நிவாரணத்தொகையாக ரூ.1 லட்சமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் 45 நாட்களுக்குள் வங்கி நிர்வாகம் வழங்க வேண்டும்.
ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 366 மானியத்தையும், ராஜதுரை கட்ட வேண்டிய குறைந்த நிலுவைத்தொகையை அவர் செலுத்துமாறு அறிவுறுத்தி, அதன்பின் கடன் நிலுவையை நேர் செய்ய வேண்டும். உரிய காலத்திற்குள் ரூ.1 லட்சம் நிவாரணத்தொகையை ராஜதுரைக்கு வங்கி நிர்வாகம் வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த நாளில் இருந்து ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.