சென்னை
உடற்பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ரத்த வாந்தி எடுத்து சாவு
|உடற்பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்தார் . சக மாணவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(வயது 22). இவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 'அமெட்' கடல்சார் பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் காலை கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படும் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பிரசாந்த் திடீரென ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாணவர் பிரசாந்த் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு நியாயம் கேட்டும், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் கிழக்கு கடற்கரை சாலையில் கல்லூரி எதிரே நேற்று முன்தினம் இரவு சக மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்பயிற்சியாளர் புருஷோத்தமனை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், நேற்று முதல் மூன்று நாட்களுக்கு கல்லூரி விடுப்பு அறிவித்துள்ளது.