கோவில் திருவிழாவில் இசை நிகழ்ச்சியை பார்க்க வந்த கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்
|தன்னை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை மாணவி தெரிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வீரக்குமாரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
கோவில் திருவிழாவையொட்டி இசைக் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரியை பார்ப்பதற்காக பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவி தனது தாயாருடன் வந்தார். இசைக்கச்சேரியை அந்த மாணவி முன்வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அதன்பின்னர் அந்த மாணவியை திடீரென்று காணவில்லை. இது குறித்து வௌ்ளகோவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த மாணவி வீட்டுக்கு வந்துள்ளார். எங்கே சென்றாய் என்று தாயார் விசாரித்த போது, தன்னை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் தொழிலாளிகளான வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29), காமராஜர்புரத்தைச் சேர்ந்த பிரபாகர் (32) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.