கோயம்புத்தூர்
மின்கம்பத்தில் மோதிய கல்லூரி பஸ்
|வால்பாறையில் மின்கம்பத்தில் கல்லூரி பஸ் மோதியது.
வால்பாறை பகுதியைச் சேர்ந்த மாணவ -மாணவிகள் அங்கலக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.இவர்கள் தினந்தோறும் வால்பாறையிலிருந்து கல்லூரிக்கு வந்து செல்வதற்காக கல்லூரி நிர்வாகம் கல்லூரி பஸ் இயக்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று அங்கலக்குறிச்சியில் உள்ள கல்லூரியிலிருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரி பஸ் வால்பாறைக்கு சென்றது.பஸ்யை வால்பாறை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுரேஷ் (வயது 35) ஓட்டிச் சென்றுள்ளார். வால்பாறைக்கு சென்றவுடன் மாணவ -மாணவிகளை டவுன் பகுதியில் இறக்கி விட்டு விட்டு அண்ணா நகர் அருகில் நடுமலை ரோடு பகுதியில் பஸ்யை நிறுத்துவதற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பத்தில் மோதியது. இதில் மின் கம்பம் இரண்டாக முறிந்து சாய்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் வால்பாறை பகுதி முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மின் வாரிய பொறியாளர்கள் மின் வாரிய பணியாளர்களுடன் அங்கு சென்று, மின் விநியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.