பெரம்பலூர்
மொபட் மீது கார் மோதி துணி வியாபாரி பலி
|பெரம்பலூரில் மொபட் மீது கார் மோதியதில் துணி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, சுத்தமடம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). துணி வியாபாரி. இவர் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தங்கியிருந்து மொபட்டில் ஊர், ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலை 6.30 மணியளவில் சிவக்குமார் கடலூர் மாவட்டம், தொழுதூருக்கு துணி வியாபாரம் செய்வதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தை தாண்டி சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் பின்னால் வந்து கொண்டிருந்த கார் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேருக்கு லேசான காயம்
காரில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் தாலுகா, துவாலாங் கண்மாய் காயா ஓடையை சேர்ந்த நடராஜ்(43), தொண்டி மெயின் ரோடு வி.ஐ.பி. நகரை சேர்ந்த அசோக்குமார், கார் டிரைவர் மரவமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த தவசி மகன் கவியரசன்(19) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இடம் விற்பனை செய்வது தொடர்பாக சென்னைக்கு காரில் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.