சென்னை
படிக்கட்டில் தொங்கியபடி ரகளை செய்ததை கண்டித்த மாநகர பஸ் டிரைவர் மீது கல்வீசி தாக்குதல்
|படிக்கட்டில் தொங்கியபடி ரகளை செய்ததை கண்டித்த மாநகர பஸ் டிரைவர் மீது கல்வீசி தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வண்ணாரப்பேட்டை,
சென்னை பாரிமுனையில் இருந்து தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. நோக்கி நேற்று முன்தினம் இரவு மாநகர பஸ்(தடம் எண் 44 கட் சர்வீஸ்) சென்று கொண்டிருந்தது. பஸ்சை கொருக்குப்பேட்டையை சேர்ந்த டிரைவர் வினோத்குமார்(வயது 46) ஓட்டினார். கண்டக்டராக தண்டையார்பேட்டையை சேர்ந்த பாபு (58) பணியில் இருந்தார்.
அப்போது பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 4 வாலிபர்களை உள்ளே ஏறி வரும்படி டிரைவர் வினோத்குமார் கூறினார். ஆனால் அவர்கள் கேட்காமல் படிக்கட்டில் தொங்கியபடி ரகளை செய்தனர்.
இதனால் பஸ்சை தங்கசாலை பகுதியில் நிறுத்திய வினோத்குமார், அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் இதுபற்றி கூறினார். இதனால் பயந்துபோன வாலிபர்கள் கீழே இறங்கி தப்பி ஓடினர். அதில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பிடிபட்ட வாலிபரை போலீசார் எச்சரிக்கை செய்து மற்றொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கண்ணன் ரவுண்டானா அருகே மேலும் 3 பேருடன் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வினோத்குமார் ஓட்டி வந்த மாநகர பஸ் மீது கல்வீசி தாக்கினர். டிரைவர் வினோத்குமார் மீதும் கல்வீசி தாக்கி விட்டு ஓடிவிட்டனர். இதில் அவரது கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கல்வீசி தாக்கிய 4 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.