விழுப்புரம்
தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த குழந்தை சாவு
|விழுப்புரம் அருகே தண்ணீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
பெண் குழந்தை
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள வாழப்பட்டு காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தற்போது அசாம் மாநிலத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு நசிக்கா (வயது 2) என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில் அனிதா தனது குழந்தை நசிக்காவுடன் நேற்று வளவனூர் குமாரக்குப்பம் காலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். மாலை 3.30 மணியளவில் குழந்தை நசிக்கா, பாட்டி வீட்டின் பின்புற பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
தண்ணீரில் மூழ்கி சாவு
அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள பாத்திரத்தில் இருந்த தண்ணீருக்குள் குழந்தை தவறி விழுந்து மூழ்கியது. இதனிடையே சிறிது நேரம் கழித்து அனிதா, தனது குழந்தையை தேடிப்பார்த்தபோது பாத்திரத்தில் இருந்த தண்ணீருக்குள் மூழ்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வளவனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதை கேட்ட அனிதா குழந்தையின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதது காண்போரின் நெஞ்சை உருக வைப்பதாக இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.