சென்னை
திருவொற்றியூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது
|திருவொற்றியூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் 15 வயது மாணவி, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் மாலை வயிற்று வலியால் துடித்த மாணவியை அவரது தாய், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
மாணவியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகள் இதுநாள் வரை கர்ப்பமாக இருப்பது தெரியாமல் இருந்த தாய், இதை கண்டு அதிர்ச்சியில் கதறி துடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸபெக்டர் ஷீலாமேரி தலைமையிலான போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு வந்த உறவினரின் மகன், முறைதவறி மாணவியுடன் தகாதமுறையில் நடந்து கொண்டதும், இதில் கர்ப்பமான மாணவி, தனது பெற்றோருக்கு தெரியாமல் மறைத்துவிட்டதும் தெரிந்தது.
அதன்பிறகு பள்ளிக்கும் வழக்கம்போல் சென்று வந்ததால் மாணவி மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. பிரசவ வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்ற பிறகுதான் அவரது நிலை வெளியில் தெரிந்தது.
மாணவியின் சொந்த ஊர் கடலூர். கூலி தொழிலாளிகளான அவரது பெற்றோர், திருவொற்றியூரில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்கள். தங்களின் ஒரே மகளின் நிலையால் பெற்றோர் துடித்து போய் உள்ளனர். மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.