< Back
மாநில செய்திகள்
மாதவரம் அருகே பரிதாபம் கொசு மருந்து குடித்த குழந்தை சாவு
சென்னை
மாநில செய்திகள்

மாதவரம் அருகே பரிதாபம் கொசு மருந்து குடித்த குழந்தை சாவு

தினத்தந்தி
|
30 Aug 2023 6:40 AM IST

மாதவரம் அருகே கொசு மருந்து திரவத்தை குடித்த குழந்தை பலியானது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 35). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியின் நந்தினி. இவர்களுக்கு சக்தி (4) லட்சுமி(2) ஆகிய 2 பெண் குழந்தைகள் உண்டு.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 2 குழந்தைகளும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நந்தினி வீட்டு வேலையில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வீட்டின் சுவிட்ச் போர்டில் சொருகி வைக்கப்பட்டிருந்த கொசு மருந்து திரவத்தை (லிக்யூட்) குழந்தை லட்சுமி திடீரென எடுத்து குடித்து விட்டாள். இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில், மயங்கி விழுந்து கிடந்ததை கண்ட குழந்தை சக்தி அச்சத்தில் அலறினாள்.

இதைக்கேட்டு பதறி அடித்து ஓடி வந்த தாய் நந்தினி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு, உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை லட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை லட்சுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த மாதவரம் பால்பண்ணை போலீசார் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொசுமருந்து திரவத்தை குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்