< Back
மாநில செய்திகள்
தனியார் பால் நிறுவனத்தில் வெடித்து சிதறிய ரசாயன பாய்லர்
திருச்சி
மாநில செய்திகள்

தனியார் பால் நிறுவனத்தில் வெடித்து சிதறிய ரசாயன பாய்லர்

தினத்தந்தி
|
11 Oct 2023 2:04 AM IST

தனியார் பால் நிறுவனத்தில் ரசாயன பாய்லர் வெடித்து சிதறியது.

மணப்பாறை:

தனியார் பால் நிறுவனம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலையில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தனியார் பால் நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு பால் நிரப்பிய பாக்கெட்டுகளை தயாரித்து, பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தினமும் காலை 7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, வீட்டிற்கு செல்வார்கள். இரவு நேரத்தில் காவலாளி மட்டும் பணியில் இருப்பார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த நிறுவனத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்ட இந்த சத்தத்தால், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, பதற்றத்திற்கும் உள்ளாகினர். மேலும் அருகில் உள்ள கிராம மக்கள், சத்தம் கேட்ட திசையை நோக்கி சென்று பார்த்தனர்.

பாய்லர் வெடித்தது

அப்போது பால் நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த தகர ஷீட்டை மேற்கூரையாக கொண்ட கொட்டகை முற்றிலும் சேதமடைந்திருந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் அமோனியம் குளோரைடு நிரப்பப்பட்டிருந்த பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளாகி இருப்பது தெரியவந்தது. இந்த விபத்தில் அங்கிருந்த பல்வேறு பொருட்கள் முற்றிலும் சேதமடைந்து நாசமானது.

அருகில் உள்ள மின்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அக்கம், பக்கத்தில் உள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காவலாளி அந்த நிறுவனத்திற்கு வெளியே இருந்ததால் உயிர் தப்பினார்.

கடும் துர்நாற்றம்

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே விபத்துக்குள்ளான பாய்லரில் இருந்து அமோனியம் குளோரைடு வெளியானதால், அந்த பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசியது.

பாய்லர் வெடித்த நேரத்தில் அங்கு பணியாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் சுமார் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்