மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வருகிறது மத்திய குழு
|வருகிற 11-ந்தேதி சென்னை வரும் மத்திய குழுவினர், 2 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. மழை விட்டு 5 நாட்கள் ஆகியும் இன்னும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பாடில்லை. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதற்கிடையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நேற்று முன் தினம் சென்னைக்கு வருகை தந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்தார். அப்போது, தமிழ்நாடு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 2வது தவணையாக ரூ.450 கோடியை உள்துறை அமைச்சகம் வழங்க உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய மத்திய குழு சென்னை வருகிறது. வருகிற 11-ந்தேதி சென்னை வரும் மத்திய குழுவினர், 2 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். இதன் பின்னர் 12-ந்தேதி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் அவர்கள் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குழு, கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.