புதுக்கோட்டை
வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது
|கந்தர்வகோட்டையில் வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது. மாணவர் மனம் திருந்தி வீசிச்சென்றார்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் மணிகண்டன் என்பவர் தனது செல்போனை ஆய்வகத்தில் சம்பவத்தன்று வைத்து விட்டு அருகில் உள்ள வகுப்பறைக்கு சென்றிருக்கிறார். அதன்பின்னர் வந்த போது அவரது செல்போனை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். அவரது செல்போன் எண்ணிற்கு அழைத்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மாணவர்களில் யாரோ ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும் என கருதினார். ஆனால் அவர் மாணவர்களை சோதனை செய்ய விரும்பவில்லை. அதற்கு பதிலாக மாணவர்களிடம் எனது செல்போனை எடுத்தவர்கள் யார் என்று தெரியாது. ஆனால் நீங்கள் எடுத்திருக்க மாட்டீர்கள். அதனையும் மீறி சபலப்பட்டு எடுத்திருந்தாலும் பரவாயில்லை. தப்பாக நினைக்கமாட்டேன். நீங்களும் என் பிள்ளைகள் தான். நான் உங்களை சோதனையிட்டால் உங்கள் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விடும். அந்த செல்போனை நீங்களே கொண்டு வந்து வகுப்பறையில் போட்டுவிட்டு செல்லலாம் என கூறினார். ஆனால் பள்ளி முடியும் வரை செல்போன் கிடைக்கவில்லை. இதனால் போலீசில் புகார் கொடுக்க ஆசிரியர் முடிவு செய்து போலீஸ் நிலையம் சென்றார். அந்த நேரத்தில் மற்றொரு ஆசிரியர் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ரிங் சென்றது. இது குறித்து ஆசிரியர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கூகுள் லொக்கேஷன் மூலம் அவரது செல்போன் இருக்கும் இடத்தை கண்டறிய முற்பட்ட போது, ஆசிரியர் வீட்டின் பின்புறம் அவரது செல்போன் இருப்பது தெரிந்தது. அங்கு புல்தரையில் கிடந்த தனது செல்போனை பார்த்ததும் அவர் மகிழ்ச்சியடைந்தார். வகுப்பறையில் செல்போனை திருடிய மாணவர், ஆசிரியரின் பேச்சால் மனம் திருந்தி அவரது வீட்டின் பின்புறம் வீசிச்சென்ற சம்பவம் ஆசிரியர் மட்டுமில்லாமல் சக ஆசிரியர்களும் நெகிழ்ச்சியடைந்தனர்.