செங்கல்பட்டு
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு:வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை
|பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 49 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏரிக்கரையில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அவரை பீகார் மாநிலத்தை சேர்ந்த இனர்ஜூட் முகியா (வயது 28) தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.
அதே நாளில் நாயக்கன் பேட்டையை சேர்ந்த 30 வயது பெண்ணையும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் கத்தி கூச்சலிட இனர்ஜூட் முகியா அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாங்கி அருகே அரிசி ஆலையில் வேலை செய்து வந்த இனர்ஜூட் முகியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் இனர்ஜூட் முகியாவின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வக்கீலாக சசிரேகா ஆஜரானார்.