< Back
மாநில செய்திகள்
வந்தவாசி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

வந்தவாசி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
20 July 2024 2:33 AM IST

மாணவியின் உறவினரான ஜானகிராமன் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

வந்தவாசி,

வந்தவாசி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த பெற்றோர், தாத்தா-பாட்டி உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வந்தவாசி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி 10-ம் வகுப்பில் தோல்வியடைந்திருந்தார். அவருடைய தந்தை மாற்றுத்திறனாளி. விடுமுறை நாட்களில் மாணவி அவருடைய தாத்தா, வீட்டிற்கு சென்று வருவார். அப்போது மாணவியின் உறவினரான ஜானகிராமன் (வயது 32) மாணவியை காதலித்து வந்துள்ளார்.

ஜானகிராமனுக்கு இடது கண் பார்வை தெரியாது. இவர்களது காதல் விவரம் தெரியவரவே மாணவியின் பெற்றோர், தாத்தா-பாட்டி ஆகியோர் இருவருக்கும் ஏப்ரல் 26-ந் தேதி அருங்குணம் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் முன்பு திருமணம் செய்து திருப்பதிக்கு சென்று விட்டு, இரண்டு நாட்கள் கழித்து அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவிக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை ஜானகிராமன் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அந்த மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவரை திருவண்ணாமலை அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். ஆனால் மாணவியுடன் ஜானகிராமன் வீட்டிற்கு சென்று விட்டார்.

தகவல் அறிந்த வந்தவாசி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் மாணவி வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக சிறுமியை கர்ப்பிணியாக்கிய ஜானகிராமன், மாணவியின் தாய் மற்றும் தந்தை, தாத்தா-பாட்டி மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்