< Back
மாநில செய்திகள்
நிலம் வாங்கி தருவதாக கூறி போதகரிடம் ரூ.8½ லட்சம் மோசடி பெண் கிராம நிர்வாக அதிகாரி உள்பட  3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நிலம் வாங்கி தருவதாக கூறி போதகரிடம் ரூ.8½ லட்சம் மோசடி பெண் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

குறைந்த விலைக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி போதகரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த பெண் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

குறைந்த விலைக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி போதகரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த பெண் கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதகர்

பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக உள்ளார். இவருடைய மனைவி தனம் (52). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சாந்தப்பன் நாகர்கோவிலில் உள்ள 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவன். நாங்கள் அன்றாடம் உழைத்து சிறுக சிறுக பணம் சேர்த்து பூதப்பாண்டி பகுதியில் சொந்தமாக நிலம் வாங்க முடிவு செய்தோம். இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் எறும்புக்காடு தம்மத்துகோணம் பகுதியை சேர்ந்த ரகுதரன் (48) எனக்கு பழக்கமானார். அவர் எங்களிடம் தேரேகால்புதூர் பகுதியில் 10 சென்ட் நிலம் விற்பனைக்கு உள்ளதாகவும். அதனை மிக குறைந்த விலையில் வாங்கி தருவதாகவும் கூறினார்.

10 சென்ட் நிலம்

மேலும் தனது மனைவி பூதப்பாண்டி பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பதாகவும், இதனால் இலவசமாக பட்டா மற்றும் சிட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். அதனைத்தொடர்ந்து நானும், என்னுடைய மனைவி தனம் மற்றும் ரகுதரன், அவரது மனைவி உஷாதேவி (43) ஆகியோர் அந்த 10 சென்ட் நிலத்தின் உரிமையாளரான புத்தன்துறை பகுதியை சேர்ந்த தாமஸ் (75) என்பவரை சந்தித்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசினோம்.

அதைத்தொடர்ந்து ரகுதரன் என்னிடம், "நிலத்தை விரைவில் பணம் கொடுத்து முடிக்க வேண்டும், எனவே முதற்கட்டமாக ரூ.5 லட்சம் வேண்டுமென கூறினார். நானும் அவரது பேச்சை நம்பி ரூ.5 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். மேலும் நிலத்தை முடித்து தங்களது பெயருக்கு மாற்ற ரூ.5½ லட்சம் வேண்டுமென தெரிவித்தார். இதனால் அவரிடம் மூன்று தவணைகளாக ரூ.5½ லட்சம் கொடுத்தேன்.

ரூ.8½ லட்சம் மோசடி

பின்னர் நிலம் கிரையம் செய்வது தொடர்பாக நில உரிமையாளரான தாமஸ் என்பவரிடம் பேசினேன். ஆனால் அவரோ என்னிடம் எந்த பணமும் வந்து சேரவில்லை என கூறினார். பின்னர் தான் நான் ரகுதரனால் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இதுபற்றி ரகுதரனிடம் கேட்டபோது, விரைவில் பணத்தை திருப்பி தருவதாக கூறினார். அதன்படி ரூ.2 லட்சம் பணத்தை ரகுதரன் திருப்பி கொடுத்தார். ஆனால் மீதமுள்ள ரூ.8½ லட்சம் தரவில்லை.

பணத்தை திருப்பி கேட்ட போது ரகுதரன், அவரது மனைவி உஷா தேவியும் என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டி தாக்குகின்றனர். என்னிடம் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்த ரகுதரன், அவரது மனைவி உஷா தேவி மற்றும் தாமஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

3 பேர் மீது வழக்கு

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கோட்டார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ரகுதரன், அவரது மனைவி உஷாதேவி, தாமஸ் ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-

மேலும் செய்திகள்