சாலையில் தனித்தனி வழிப்பாதை அமைக்கக்கோரி வழக்கு; அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
|சென்னை சாலைகளில், வாகனங்களுக்கு தனித்தனி வழிப்பாதை அமைக்க கோரும் வழக்கிற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
உலகத்திலேயே அதிக வாகனங்கள் ஓடும் மாநகரமாக சென்னை மாநகரம் திகழ்ந்து வருகிறது. இங்கு சுமார் 45 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள 53 மாநகரங்களில் அதிக விபத்து நடைபெறும் மாநகரமாகவும் சென்னை உள்ளது.
சென்னை மாநகரில் முன்பு பஸ், கார், மோட்டார் சைக்கிள் என்று வாகனங்கள் செல்ல சாலையில் தனித்தனி வழிப்பாதை (லேன்) அமைக்கப்பட்டிருந்தது. இதில் வழிப்பாதை மாறி வாகனங்கள் ஓட்டப்பட்டால் அபராதமும் விதிக்கப்பட்டது.
தற்காலிக நிறுத்தம்
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை அமலில் இல்லை. இதுகுறித்து பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்த சென்னை போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், 'மெட்ரோ ரெயில் திட்டப்பணியினால், இந்த நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மெட்ரோ ரெயில் பணி முடிவடைந்தும், அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பழைய நடைமுறையை அமலுக்கு கொண்டு வரவில்லை'' என்று கூறியுள்ளார்.
இதனால், சாலையில் எந்த பகுதியிலும் எந்த வாகனங்களும் செல்லலாம் என்ற நிலை உள்ளது. கனரக வாகங்கனங்கள் இஷ்டம்போல் சாலையில் செல்வதால், விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது.
கோரிக்கை
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு நான் கடந்த ஆண்டு கோரிக்கை மனு அனுப்பினேன். இதன் அடிப்படையில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி, சென்னை போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், இணை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு கடிதம் எழுதி, சென்னை மாநகரில் மீண்டும் வாகனங்களுக்கு தனித்தனி வழிப்பாதை அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். அதன்பின்னரும், போலீஸ் அதிகாரிகள் இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
பதில் மனு
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், இந்த வழக்கிற்கு வருகிற 22-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.