திருவள்ளூர்
பேரம்பாக்கத்தில் தையல்காரரை கத்தியால் வெட்டிய 2 பேர் மீது வழக்கு
|பேரம்பாக்கத்தில் தையல்காரரை கத்தியால் வெட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேரம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பேரம்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவர் ராஜசேகரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது சட்டை மற்றும் லுங்கியை தைப்பதற்காக கொடுத்துள்ளார். ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுநாள் வரையிலும் அவர் துணியை தைத்து கொடுக்கவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் முருகன், தையல்காரர் ராஜசேகர் கடைக்கு வந்து தனது துணிகளை தருமாறு கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் தனது நண்பரான நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் உடன் சேர்ந்து ராஜசேகரை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் முகத்தில் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த அவர் திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராஜசேகர் மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக முருகன், சசிகுமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.