திருச்சி
சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டிய சரக்கு வேன் பறிமுதல்
|சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டிய சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜீயபுரம்:
திருச்சி மாநகரில் ஏராளமான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் மிஞ்சக்கூடிய கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் உணவுகள் போன்றவற்றை இரவு நேரத்தில் ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்து, திருச்சி அருகே உள்ள பழூர் சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் திருச்சி-கரூர் செல்லும் இந்த முக்கியமான சாலையில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஜீயபுரம் தனிப்பிரிவு போலீசார், அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் கோழி இறைச்சி மற்றும் மீதமான உணவுகளை கொண்டு வந்து சாலையோரத்தில் கொட்டுவதை கண்ட போலீசார், அந்த சரக்கு வேனில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சரக்கு வேனை பறிமுதல் செய்து ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சரக்கு வேனில் எந்தெந்த பகுதியில் இருந்து கழிவுகளை சேகரித்து, இங்கு வந்து கொட்டப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.