நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல்
|நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
போர்ட் பிளேர்,
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், போர்ட் பிளேரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1334 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
7422 பேருக்கு வேளாண் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விவசாயி நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15,500 பேருக்கு ரூ.6,000 நிதியுதவியும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 13,000 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப் பட்டுள்ளது.
கிரேட் நிக்கோபார் பகுதிக்குட்பட்ட கேம்பல்பே-யில் ரூ. 75000 கோடி மதிப்பில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.