கன்னியாகுமரி
ரேஷன் அரிசியை கடத்திய கார் விபத்தில் சிக்கியது
|கேராளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது விபத்தில் சிக்கியது.
படந்தாலுமூட்டை அடுத்த அதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் நேற்று காலை களியக்காவிளைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது கல்லுக்கட்டி பகுதியில் எதிரே வேகமாக வந்த சொகுசு கார் மணிகண்டன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் காருடன் தப்பி செல்ல முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் கார் டிரைவர் தப்பியோடிவிட்டார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனையிட்டனர். அப்போது காரில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் காரில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றபோது, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து காருடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.