திருச்சி
சாலையில் ஓடிய கார் திடீரென தீப்பற்றி எரிந்தது
|சாலையில் ஓடிய கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
கார் தீப்பற்றி எரிந்தது
தொட்டியம் வட்டம் பாலசமுத்திரத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 50). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முசிறியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு, இரவில் மீண்டும் ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
நாமக்கல் சாலையில் தந்தை பெரியார் பாலத்தை கடந்து, கொக்கு வெட்டியான் கோவில் அருகே சென்றபோது காரின் என்ஜின் பகுதியில் இருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன், உடனடியாக காரை நிறுத்தி, அதில் இருந்து இறங்கினார்.
ஆசிரியர் உயிர் தப்பினார்
இந்த நிலையில் சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இது பற்றி அறிந்த முசிறி போலீசார், இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வாகனத்தில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தில் காரில் தீப்பற்றி எரிய தொடங்கியபோதே முருகன், காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.