காஞ்சிபுரம்
மாங்காடு அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்
|மாங்காடு அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த காரை பொதுமக்களே கிரேன் உதவியுடன் மீட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், மேக்ஸ்வொர்த் நகர் பகுதியில் கார் ஒன்று சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் திறந்த வெளியில் இருந்த மழைநீர் கால்வாயில் திடீரென கார் கவிழ்ந்ததில் காரின் ஒரு பகுதி முழுவதும் மழை நீர் கால்வாயில் சிக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைவாக சென்று காரில் சிக்கி இருந்த நபரை மீட்டனர். பின்னர் போலீஸ் வரும் வரை காத்திருக்காமல் அந்த பகுதி மக்களே ஒன்று சேர்ந்து கிரேனை வரவழைத்து கிரேன் உதவியுடன் சாலையோர மழை நீர் கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்து இருந்த காரை பத்திரமாக மீட்டனர்.
இதில் காரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. காரை மீட்ட அடுத்த கனமே காரை ஓட்டி வந்த நபர் காரை அங்கிருந்து வேகமாக எடுத்து சென்றார். இது குறித்து புகார்கள் ஏதும் வராத நிலையில் காரை ஓட்டி வந்த நபர் யார்? குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா? என்ற கோணத்தில் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் திடீரென கவிழ்ந்த சம்பவத்தில் பொதுமக்களே ஒன்று சேர்ந்து கிரேன் உதவியுடன் காரை மீட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.