சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு
|சோழிங்கநல்லூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சோழிங்கநல்லூர்,
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை கண்டிகை பகுதியை சேர்ந்தவர் மாதவன்பிள்ளை(வயது 62). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இன்று மாலை தனது மனைவியுடன் அவருக்கு சொந்தமான காரில் அடையார் பகுதிக்கு சென்று விட்டு மாலை ஏழு மணி அளவில் ஓஎம்ஆர் சாலை வழியாக தனது வீட்டிற்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் தீ பிடிக்க தொடங்கியது.இதை பார்த்த மாதவன் பிள்ளை காரில் இருந்து மனைவியை இறக்கி விட்டார். அதன் பின்னர் காரை யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் சர்வீஸ் சாலையில் சென்று நிறுத்தி விட்டு காரில் எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.
இது பற்றி தகவல் அறிந்த சிறுசேரி தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் கார் முழுவதும் எரிந்தது. இச்சம்பவம் குறித்து மாதவன் பிள்ளை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.