கூகுள் மேப்பை பார்த்து டிரைவிங்.. கூடலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கார்
|நிலைமையை உணர்ந்து சுற்றுலா பயணிகள் வந்த அந்த காரை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு செல்ல வழிகாட்டினர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்வதற்கு, கர்நாடகா மற்றும் கேரளா உள்பட வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கூடலூர் வழியாக வந்து செல்கின்றனர். இதுதவிர பெரும்பாலும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கூகுள் மேப்பை (வழிகாட்டி) பயன்படுத்தி தங்களது வாகனங்களில் வருகின்றனர்.
கடந்த மாதம் கர்நாடகாவில் இருந்து காரில் வந்த சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு கூடலூர் வழியாக தங்களது ஊருக்கு திரும்பினர். அப்போது கூகுள் மேப்பை பயன்படுத்தியவாறு வந்ததால் கூடலூர் ஹெல்த் கேம்ப் பகுதியில் நடைபாதையில் உள்ள படிக்கட்டுகளில் கார் சிக்கியது.
பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்கள் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு காரை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் கூடலூரில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
இந்த நிலையில், கூடலூர் வழியாக கூகுள் மேப்பை பார்த்தவாறு, ஒருகாரில் சுற்றுலா பயணிகள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் கூகுல் மேப்பை பார்த்து வந்ததால் அதன் வழிகாட்டலின் படி, அந்த கார் கூடலூர் அக்ரகார தெருவுக்குள் புகுந்தது.
சிறிது தூரம் சென்ற பிறகு கார், மறுபக்கம் செல்ல பாதை இல்லாமல் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் பகுதியில் நின்றது. இதனால் குறுகலான பாதைக்குள் காரை திருப்ப முடியாமல் திணறினர்.
இதைக்கண்ட குடியிருப்பு வாசிகள் வெளியே ஓடிவந்து சுற்றுலா பயணிகளை விசாரித்தனர். பின்னர் நிலைமையை உணர்ந்து சுற்றுலா பயணிகள் வந்த அந்த காரை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு செல்ல வழிகாட்டினர். இதன் அடிப்படையில்,சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு கார் தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னரே சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர். இந்த பிரச்சினை கூடலூர் பகுதியில் தொடர்ந்து நீடிப்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.