< Back
மாநில செய்திகள்
மின்கம்பத்தில் கார் மோதியது; 6 பேர் உயிர் தப்பினர்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மின்கம்பத்தில் கார் மோதியது; 6 பேர் உயிர் தப்பினர்

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

மயிலாடுதுறை அருகே கார் டயர் வெடித்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதன் காரணமாக மின்கம்பம் 2 துண்டாக முறிந்து சாலையில் விழுந்தது. இதில் காரில் பயணித்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

டயர் வெடித்தது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா புளியங்காடு பகுதியை சேர்ந்த முத்துசாமி, இவரது மனைவி சாந்தி மற்றும் இவர்களது உறவினர்கள் சிவமணி, அமுதசெல்வி, விஜயகுமார், கார் டிரைவர் முத்துக்குமார் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஊர் திரும்பினர்.

மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டை வழியே சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் முன் பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதி அருகில் இருந்த வீட்டின் கம்பிவேலியில் மோதி நின்றது.

2 துண்டாக உடைந்த மின்கம்பம்

இந்த கார் மோதியதில் மின்கம்பம் 2 துண்டாக உடைந்து சாலையின் நடுவே விழுந்தது. இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட பயங்கர சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து காரில் பயணித்த சாந்தி மற்றும் உறவினர்களை மீட்டனர். காரில் முன்பக்கம் பகுதி மட்டுமே சேதம் அடைந்ததால் சாந்தி மற்றும் உறவினர்கள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் மின்கம்பம் மற்றும் மின் கம்பிகளை அப்புறப்படுத்தினர்.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பனார்கோவில் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து நடந்த நேரத்தில் சாலை வழியை எந்த ஒரு வாகனமும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்