< Back
மாநில செய்திகள்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்தது
மாநில செய்திகள்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
13 March 2023 2:27 AM IST

லாரி மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நிகில் (வயது 36). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையையொட்டி சொந்த ஊர் சென்ற அவர், தனது மனைவி காவியா (33), மகள்கள் சிவகங்கா (3), சிவ ஆத்மிகா (1½) ஆகியோருடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை நிகில் ஓட்டினார்.

இவர்களது கார் நேற்று காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஷேக்உசேன்பேட்டையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, முன்னால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மீது கார் திடீரென மோதியது. இதில் நிகிலின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையிலும் மோதியது.

தீப்பிடித்து எரிந்தது

அப்போது கார், திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த நிகில் குடும்பத்தினர், அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர். பின்னர் சிறிது நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

இதுபற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த 4 பேரையும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்