காஞ்சிபுரம்
குன்றத்தூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|குன்றத்தூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த புழல் காவாங்கரையை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 28). இவர் தனக்கு சொந்தமான காரில் நேற்று அதிகாலை தனது நண்பர் கணபதி என்பவருடன் தாம்பரத்தில் இருந்து வேங்கடமங்கலம் கிராமத்திற்கு சென்று தங்களது நண்பரை பார்த்துவிட்டு தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் புழல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.
இதை பார்த்ததும் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினர். அதற்குள் காரின் முன் பகுதி தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தீயை அணைக்க போராடினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் உள்ள பேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.