< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
6 Oct 2022 11:32 AM IST

திருவொற்றியூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு சொந்தமான காரில் பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வேலைக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் வழக்கம்போல் ஊழியர்களை இறக்கி விட்டு டிரைவர் ராம்கி எண்ணூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.

திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே சென்றபோது திடீரென காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் ராம்கி, காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அதற்குள் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரியத்தொடங்கியது. தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. டிரைவர் ராம்கி உடனடியாக காரில் இருந்து இறங்கி விட்டதால் உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்