< Back
மாநில செய்திகள்
பரங்கிமலையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
சென்னை
மாநில செய்திகள்

பரங்கிமலையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
30 July 2023 12:18 PM IST

பரங்கிமலை,

சென்னை திருவல்லிகேணியை சேர்ந்தவர் குணாநிதி (வயது 28). இவர், பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷர்மிளா (26). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

குணாநிதி தனது மனைவியுடன் காரில் பல்லாவரத்தில் இருந்து திருவல்லிகேணிக்கு செல்ல கிண்டி நோக்கி வந்தார். பரங்கிமலை- ஆலந்தூர் சந்திப்பான சிமெண்ட் ரோடு அருகே வந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. உடனடியாக குணாநிதி காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, மனைவியுடன் கீழே இறங்கினார். அதற்குள் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. மளமளவென கார் முழுவதும் பரவியது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சைதாப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்