கள்ளக்குறிச்சி
நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|உளுந்தூர்பேட்டை அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை
செங்கல்பட்டு மாவட்டம் மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் கணபதி(வயது 31). இவர் நேற்று தனது குடும்பத்தாருடன் காரில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் என்னும் இடத்தில் வந்தபோது காரின் முன்பக்க என்ஜீனில் இருந்து திடீரென தீப்பொறி கிளம்பியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் காரை சாலையிலேயே நிறுத்திவிட்டு அவசர அவசரமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
அடுத்த வினாடிகளில் கார் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதையடுத்து கிரேன் மூலம் தீயில் எரிந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.